வெள்ளி, 13 மார்ச், 2009

ஆராரோ


நிழலுள்ள செடிகளை அறியாத காளானைப் போல்
காட்டில் அமர்கிறேன்
மரங்கள் புலம்புகின்றன

கூர்மையான நகங்கள் கொண்ட கால்களால்
காற்று இல்லைகளில் நடப்பது பற்றி

சருகுகளோ உதிரும் போது
காற்றின் பாதச்சுவடுகளை கண்களாக்கிவிட்டுச் சாகின்றன

அப்போதெல்லாம்
நிர்வானப்படுத்த முடியாத காட்டு மரங்களின் ஆடைகளை
முத்தமிடுகிறேன்

நதியின் துளிகள்
மரங்களின் சதைக்குள் நீல நிறத்தில் இல்லை
ரத்தமென உயிர் வலிமை குன்றியதுமில்லை

ஆராரோ என்ற சொல் காட்டுப் பூக்களின் வாசனை என்றும்
ஆரிரோ என்ற சொல் மான்களின் விழி என்றும்
நான் யாரிடம் சொல்வது

அங்கங்கே நீண்டு கொண்டிருக்கும்
மரங்களின் கரங்களை அணைத்து
பைத்தியக்க் காரியைப்போல் இவற்றை பாடி அலைகிறேன்
மரங்கள் உறங்குகின்றன

விடியற்காலையில்
காட்டுக்குள் வீழும் ஒளிக்கற்றைகள்
மரங்களின் புருவங்களாகின்றன.

- தேன்மொழி தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக