வெள்ளி, 13 மார்ச், 2009

எழுக தமிழினம் வெல்க தமிழீழம்

எங்கள் கெபிகளை
என்றும் சிலந்திகள் கூட
வலை நெய்து அடைக்கப் போவதில்லை

நீர்க்கால்கள் எம்மண்ணை
பிரித்துப் பார்க்கப் பழகி
ஆண்டுகள் ஆகிவிட்டன

ரத்தம் வழிந்தோடும் இடமெல்லாம்
யுத்தம் என்ற முழக்கம்
எங்கள் குரல்வளைகளில் குடியேறிவிட்டன

அகரமும் இகரமும் ழகரமும் எங்கள் மொழியழகு
நீ எழுதிப்பழகவே யுகம் வேண்டும்
தமிழினத்தின் ஆன்ம எழில்
ஆயுதத்தால் சாகாது
உங்களால் எங்கள்
ஆயுத எழுத்தைக் கூட அழிக்க இயலாது

நதிகள் கொந்தளித்து சிங்களத் தீவுகள் நகர்ந்து வந்தாலும்
பயப்பட தமிழன் புல்லுக்கு பூவாய் பிறக்கவில்லை

வீசிய குண்டுகளால்
குடல் நடுச்சாலையில் சிதறிய பின்னும்
நாங்கள் நக்கிப் பிழைக்கவில்லை

உணவோடு ரத்தமும் தண்ணீருமாய் பிசைந்து தின்று திரியும் விரல்கள் சோறு தின்னும் சுதந்திர காலம் வரைத் துடிக்கும்

பூனையின் காலில் அகப்பட்ட ஒனானின் தவிப்பாய்
எத்தனை ஆண்டுகள் எம்மக்களுக்கு

விளையாட உயிர்
அள்ளி இறைக்க தமிழச்சிகளின் அங்கம்
மிதியடிகளை சிதற பிடரிகள்
காறித் துப்ப கருவறை வழிகள்
சிங்களச் சிறுவனுக்கும் சுட்டுப் பழக தமிழர் நெஞ்சு

உங்கள் ஆயிரம் சிப்பாய்கள்
ஒரு தமிழனின் ..........
எம் இனம் எழுந்தால் சிங்களத் தீவுகளுக்குப் பாலம் இராது

மண் மனிதர்களுக்குத்தான் முதலில் என
ரத்தம் கேட்கும் காளியின் நாக்குகளை அறுத்து எரிந்து
கடவுள்களையே தள்ளி வைத்தோம் எம் மண்ணை பிச்சை கேட்கும் இனத்திற்கு வரலாறு எழுதும்வரை
வைகை ஆற்றங்கரையில் குடைபிடித்துக் கொண்டு நிற்கமாட்டோம்

போராடும் போராளிகள் புதைக்கப்படும் இடத்திலிருந்து
வெறும் காலடித்தடங்கள் புறப்படுவதில்லை

மலை முகடுகள் மேலே பருந்துகள் பறந்தால் கூட
மரணமா தோழா எனப் பதைக்கும் எம் மக்கள்
இனவிடுதலை கொடி நோக்கி
அண்ணாந்து பார்க்கும் நாள் வரும்

எங்கள் கெபிகளை
என்றும்
சிலந்திகள் கூட வலை நெய்து அடைக்கப் போவதில்லை


தேன்மொழி தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக